search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணைகள் பாதுகாப்பு மசோதா"

    தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்த அரசு முயற்சி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார். #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது பேரதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா 2011-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவை கடுமையாக எதிர்த்துவந்தார்கள். மேலும், 2016-ம் ஆண்டிலும், அணைகள் பாதுகாப்பு மசோதாவின் சில பிரிவுகள் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக உள்ளதாகவும், அவற்றை எல்லாம் நீக்க வேண்டும் எனவும், அதுவரை அணைகள் பாதுகாப்பு மசோதாவின் 2016 வரைவை தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் முன்னெடுத்துச் செல்லக்கூடாது என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

    தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், மாநில உரிமைகளுக்கு அடிமேல் அடி விழுந்துகொண்டுதான் இருக்கிறது. இது தொடர்பாக, மேம்போக்காக அணைகள் பாதுகாப்பு மசோதாவை கொண்டுவருவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள முடிவை தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதி அதை பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வெளியிட்டதோடு, தனது கடமை முடிந்துவிட்டது என்று கருதாமல் மாநில உரிமைகளை, குறிப்பாக தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க முதலமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDinakaran
    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #MKStalin

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மசோதாவிற்கு 13.6.2018 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள செயலை, மாநில சுயாட்சியின் மீது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நடத்தும் தொடர் தாக்குதல்களில் ஒன்றாகவே திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.

    பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதலில் “2016 மசோதா” என்றும், இப்போது “2018 மசோதா” என்றும் பெயர் மாற்றம் பெற்று, நாட்டில் உள்ள ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணைகளைப் பாதுகாக்கப் போகிறோம் என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட மசோதாவில் அந்த “விருப்புரிமை” மாநிலங்களுக்கு வழங்கப்படாமல் பறிக்கப்பட்டிருக்கிறது.

    மாநிலப் பட்டியலில் இருக்கும் ஒரு அதிகாரத்தையே அபகரித்திடும் உள்நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் இந்த மசோதாவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள எந்த மத்திய அரசும், மாநிலங்களையும் அவற்றின் உரிமைகளையும் பாதிக்கும் இது போன்ற சட்டத்தை நிறைவேற்ற முன் வராது.

    இப்படியொரு மசோதாவை கொண்டு வந்துள்ள பா.ஜ.க. அரசு , “2018 அணை பாதுகாப்பு மசோதாவை” இதுவரை மாநிலங்களுக்கு அனுப்பி கருத்துக் கேட்கும் அடிப்படை ஜனநாயகக் கடமையைக்கூட நிறைவேற்றவில்லை. அதற்குள் மத்திய அமைச்சரவை மாநிலங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தன்னிச்சையாகவே ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

    அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள “பொதுப்பட்டியல்” அதிகாரங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துவந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது மாநிலப் பட்டியல் பிரிவு 17ல் இருக்கும் இந்த அதிகாரத்திலும் கை வைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    தமிழகத்தைப் பொறுத்தவரை கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுடனுமே நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொடர்பில் உள்ள மாநிலம் ஆகும். இதை விட முக்கியமாக முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நான்கு அணைகள் கேரளாவில் இருந்தாலும், இன்றைக்கும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    இந்த “அணை பாதுகாப்பு சட்டம்” தமிழகத்திற்கு உள்ள அந்த உரிமையை நிலைநாட்டியிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளக் கூட முடியாத அளவிற்கு, பாஜகவின் புதிய மசோதாவில் ரகசியமும் மர்மமும் பாதுகாக்கப்படுகிறது.

    இந்தப் புதிய வரைவு மசோதா தமிழக அரசுக்கு இதுவரை அனுப்பப்பட வில்லை. அணைகள் பாதுகாப் பையும், மக்களின் பாதுகாப் பையும் உறுதி செய்வது மாநில அரசின் கடமை. அந்தப் பொறுப்புணர்வு எந்த மாநில அரசுக்கும் இருக்கும் என்பதை மத்திய அரசு ஏனோ உணரத் தவறி, இது போன்ற மசோதாவைக் கொண்டு வருகிறது.

    குறிப்பாக டெல்லியில் அமைய இருக்கும் ஒரு ஆணையம்,மேட்டூர் அணை, கல்லணை போன்றவற்றின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்யும் என்பது ,மக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தில் அப்பட்டமாகக் குறுக்கிடு வதாகும்.

    ஆகவே மாநிலப் பட்டியலில் இருக்கும் அதிகாரத்தைப் புறக்கணித் திடும் விதத்தில், அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பாதுகாப்பை மாநில அரசே கவனித்துக் கொள்ளும் என்றும், அணைகளின் பாதுகாப்பை அந்தந்த மாநிலங்களே ஏற்றுக்கொள்ளும் என்றும், மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டம் தேவையில்லாத ஒன்று என்றும், அ.தி.மு.க அரசு நடப்பு சட்ட மன்றக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, பா.ஜ.க அரசின் இந்த எதிர்மறை முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MKStalin

    மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை சட்டம் ஆக்கி, தமிழ்நாட்டுக்கு நிரந்தரக் கேடு செய்ய முடிவு எடுத்துள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஐக்கிய முற்போக்குக் முன்னணி ஆட்சி நடந்த போது, கேரள மாநில அரசின் சார்பாக மத்தியில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ‘அணை பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் மிகத்தந்திரமாக ஒரு மசோதாவைத் தயாரித்தனர். அந்த மசோதா சட்டம் ஆக்கப்பட்டால், அந்தந்த மாநிலங்களின் எல்லைகளுக்கு உள்ளே இருக்கின்ற அணைகளின் மொத்த நிர்வாகக் கட்டுப்பாடும், பராமரிப்பு உள்பட அனைத்து முடிவுகளும், அம்மாநில அரசுகளுக்கே உரிமை ஆக்கப்படும்.

    இதனால், இந்தியாவிலேயே அதிகமாகப் பாதிக்கப்படப்போகும் மாநிலம் தமிழ்நாடுதான்.

    2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழகம் பென்னி குயிக் அணையில் 142 அடி முதலில் தேக்கிக் கொள்ளலாம்; பின்னர் 152 அடி வரை தேக்கிக் கொள்ளலாம். இதற்கு எதிராகக் கேரள அரசு செயல்படக் கூடாது என்று கூறினர்.

    ஆனால் கேரள அரசு உடனே சட்டமன்றத்தைக் கூட்டி, தங்கள் மாநிலத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும், மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக் கும் என்றும், அணைகள் குறித்து, மாநில அரசு எடுக்கும் முடிவில் எந்த நீதிமன்றமும் குறுக்கிட முடியாது என்றும் சட்டம் இயற்றியது.

    பின்னாளில் உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்தது.

    இந்தப் பின்னணியில் தான், கேரள அரசுக்குச் சாதகமாகத் திட்டமிட்ட அதிகாரிகள், அணைப் பாதுகாப்பு மசோதா என்ற புதிய மசோதாவைத் தயாரித்தனர். அதன்படி, முல்லைப்பெரியாறு அணை குறித்து முடிவு எடுக்கும் முழு உரிமையும், கேரள அரசுக்கே உரியதாகி விடும் என்பதால், 2012 டிசம்பர் மாதம் 5-ந்தேதி அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கை நான் நேரில் சந்தித்து, ‘உத்தேசித்துள்ள அணை பாதுகாப்பு மசோதாவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரக் கூடாது; சட்டம் ஆக்கக் கூடாது; அரசியல் சட்டத்தின் 262-வது பிரிவின்படி அமைக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தின் குறிக்கோளுக்கு எதிரான நிலைமை விளையும்; தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றேன்.

    கர்நாடகமும் இப்படி ஒரு சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழகத்திற்கு உரிமையான காவிரித் தண்ணீரைக் கொடுக்காது; ஆகவே, விபரீதமான நிலைமைகள் உருவாகும்; இந்த நிலை எழுந்தால், இந்திய ஒருமைப்பாடு எங்களுக்கு எதற்காக? சோவியத் ஒன்றியம் போல இந்தியா தனித்தனி நாடுகள் ஆகின்ற நிலைமைக்கு வித்திட்டு விடாதீர்கள்’ என்று கூறினேன்.

    அது மட்டும் அல்ல. அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த, மறைந்த ஜெயலலிதா, அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக ஆணித்தரமான வாதங்களை முன் வைத்து, பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன்.

    வர இருந்த ஆபத்து நீங்கி விட்டது என்ற நிம்மதியோடு இருக்கும் நிலையில், நம் தமிழ்நாட்டின் தலையில் பாறாங்கல்லைப் போடுவதைப் போல, அணை பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வர நரேந்திர மோடி அரசு முடிவு எடுத்து, கடந்த 13-ம்நாள் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் தந்து இருக்கிறது. அடுத்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து சட்டம் ஆக்கவும் திட்டமிட்டுள்ளது.

    கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைக் கொடுக்காமல் அநீதி விளைவிக்க, அணை பாதுகாப்பு மசோதா வழி வகுத்து விடும்.

    ‘இந்த அணை பாதுகாப்பு மசோதா குறித்த விவரங்கள் எதுவும் தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்படவில்லை’ என்று, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதோடு, ‘மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இந்த மசோதாவைக் கொண்டு வரக்கூடாது’ என்றும் தெரிவித்து இருக்கிறார்.

    எனவே, அணை பாதுகாப்பு மசோதாவின் முழு விவரங்களையும் மாநில அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால், மூடு மந்திரமாக வைத்துக்கொண்டு, மத்திய அரசு இந்த மசோதாவைச் சட்டம் ஆக்கி, தமிழ்நாட்டுக்கு நிரந்தரக் கேடு செய்ய முடிவு எடுத்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், நதிநீர் உரிமைப் போராளிகளும் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #MDMK #Vaiko
    மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ளதால் அதனை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
    சென்னை:

    நதிநீர் பங்கீடு தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு மசோதா ஒன்றை தயாரித்தது. இந்த மசோதாவுக்கு கடந்த புதன் கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், இந்த மசோதா மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளதால் மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த மசோதாவின் படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஒரே மாதிரியான அணைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க முடியும். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை அமைக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த ஆணையம் நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.



    ஒரு மாநிலத்துக்கு சொந்தமான அணை, மற்றொரு மாநிலத்தில் அமைந்திருத்தால் மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் பணிகளையும், தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்ளும். இதன் மூலம் அணை தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகள் தீர்க்கப்படும்.

    மாநில அரசுகள் மாநில அளவில் அணைகள் பாதுகாப்பு குழுவை அமைக்கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் உள்ள வல்லுநர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த அணைப் பாதுகாப்பு வல்லுநர்களுடனும் ஆலோசிக்கப்பட்டு இந்த மசோதா இறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

    மாநில அரசுகளின் கருத்துகளை கேட்ட பிறகே இந்த மசோதாவை சட்டமாக்க வேண்டும் எனவும் முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    ×